ஈரோடு மாவட்டம்,பெயர்க் காரணம்,வரலாறு & எல்லைகள்:-
ஈரோடு மாவட்டம்,பெயர்க் காரணம்,வரலாறு & எல்லைகள்:-
ஈரோடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களுள் ஒன்றாகும். ஈரோடு இதன் தலைநகராகும். இது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திருப்பூர் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டங்கள், கிழக்கில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. காவிரி, பவானி, மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன.
1996-ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.
பெயர்க் காரணம்;-
பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கு, கபாலீசுவரர் என்ற பெயர். அதனை ஒட்டி ஈர ஓடு என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர்.
வரலாறு:-
இலக்கியப் புகழும், வரலாற்று பெருமையும் ,தொல்பொருள் சிறப்பும் மிக்க தமிழ்நாட்டில் எட்டாவது பெருநகரமாக திகழ்வது ஈரோடு மாவட்டம். 3000 வீடுகளைக்கொண்டு முக்கிய வணிக ஊராகத்திகழ்ந்த ஈரோட்டை பல அன்னியப்படைகள் தாக்கி அழித்தன. அனைத்து செல்வங்களும் கொள்ளையடித்து கொண்டு போகப்பட்டன.அதனால் ஈரோடு 1792ஆம் ஆண்டில் வெறும் 400 இடிந்த வீடுகளை மட்டுமே கொண்டிருந்தது.
பின்பு 4-3-1799 ல் திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈரோடு மாவட்டப்பகுதி முழுவதும் கும்பினியர் வசமானது.அப்பொழுது நொய்யல் ஆற்றை மையமாக வைத்து 1.நொய்யல் தெற்கு மாவட்டம் 2.நொய்யல் வடக்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.இதற்கு பவானியும்,தாராபுரமும் தலைநகரங்களாயின.
பின்னர் திருத்தி அமைக்கப்பட்டு 1804ல் கோயம்புத்தூரை தலைநகராகக்கொண்டு மாவட்டம் அமைக்கப்பட்டது.இதற்கு சான்றாக பல ஓலைச்சுவடிகள் கோயம்புத்தூர் ஜில்லா பெருந்துறை தாலூக்காவுக்கு சேர்ந்த ஈரோடு கிராமம் என்று கூறுகிறது.
24-9-1979 முதல் பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. ஈரோடு நகராட்சி 01.01.2008 முதல் "ஈரோடு மாநகராட்சி" யாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
எல்லைகள்:-
தெற்கில் திருப்பூர் மாவட்டமும், கிழக்கில் சேலம், நாமக்கல் கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடகமும், மேற்கில் கோயம்புத்தூர் , நீலகிரி மாவட்டங்களும் ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
Comments
Post a Comment